திருப்பூரில் திடீர் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி

வெயில் வாட்டி வந்த நிலையில் திருப்பூரில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-02-20 18:05 GMT
திருப்பூர்:
வெயில் வாட்டி வந்த நிலையில் திருப்பூரில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாட்டி வதைத்த வெயில் 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்து கொண்டிருக்கிறது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மதிய நேரங்களில் வெயில் அதிகமாக இருந்ததால், ஒரு சிலர் வெளியே செல்வதையும் தவிர்த்து வந்தனர்.
இதுபோல் இரவு நேரம் மற்றும் அதிகாலையில் பனியின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. இவ்வாறு ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவி வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
கனமழை 
இதன் பின்னர் காலை 10 மணிக்கு திடீரென மழை பெய்தது. முதலில் சாரல் மழையாக பெய்துகொண்டிருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் குடைபிடித்தபடியும், பெண்கள் தலையில் துப்பட்டாவை போட்டபடியும் சென்றனர். மேலும், இந்த மழையில் திருப்பூர் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, ஏ.பி.டி. ரோடு என முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈஸ்வரன் கோவில் வீதி நொய்யல் ஆற்று பாலத்தில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதுபோல் ஊத்துக்குளி ரோடு டி.எம்.எப். பாலத்தின் கீழ் மழை வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் அனைத்தும் தத்தளித்தபடி சென்றன. நீண்ட நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
அங்கேரிபாளையம்
திருப்பூர் பிச்சம்பாளையம்புதூர் சந்திப்பு, அங்கேரிபாளையம் ரோடு, காந்திநகர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் மழைநீர் முழங்கால் அளவிற்கு ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் ஸ்ரீநகரில் மழை பெய்தபோது அங்குள்ள சாக்கடை கால்வாய் நிரம்பியதால் வீதிகளில் மழைநீருடன், கழிவுநீரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் மக்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

மேலும் செய்திகள்