கஞ்சா வியாபாரி சிலோன் சேகர் கைது நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி

கஞ்சா வியாபாரி சிலோன் சேகரை நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2021-02-20 17:42 GMT
தஞ்சாவூர்:-
கஞ்சா வியாபாரி சிலோன் சேகரை நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
3 பேர் கைது 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் அருகே வெளிவயல் கடற்கரை பகுதியில் நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சோதனை நடத்தினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் இருந்த 170 கிலோ கஞ்சா பிடிபட்டது. 
மீன்பிடி படகில் கஞ்சா கடத்த முயன்ற படகு உரிமையாளர் கீழத்தோட்டம் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிலோன் சேகர்
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மதுரையை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சிலோன் சேகர் என்கிற சேகரை கடந்த 4 மாதங்களாக நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தேடி வந்தனர். 
இந்த நிலையில் சேகர் சென்னை சூளைமேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் சீனிவாஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டுகள் திருவேங்கடம், கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சென்னைக்கு விரைந்து சென்றனர்.
மாறுவேடத்தில் சென்று கைது 
அங்கு மாறுவேடத்தில் கண்காணித்து வந்த தனிப்படை போலீசார், பதுங்கி இருந்த சிலோன் சேகரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சிலோன் சேகர் ஏற்கனவே ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். தற்போது இவர் மீது மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வேட்டைக்கு தயார் 
இந்த நிலையில் சிலோன் சேகரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களை போலீசார் ஆராய்ந்தபோது, தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய நபர்கள், கஞ்சா கடத்தலுக்காக அவருடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து பெரிய அளவில் கஞ்சாவை வாங்கி தமிழகம் முழுவதிலும் சேகர் சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது. 
கஞ்சா கடத்தல் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அடுத்த வேட்டைக்கு தயாராகி வருகின்றனர்.

மேலும் செய்திகள்