விழுப்புரத்தில் காங்கிரசார் தடையை மீறி பாதயாத்திரை 172 பேர் கைது

விழுப்புரத்தில் காங்கிரசார் தடையை மீறி பாதயாத்திரை 172 பேர் கைது

Update: 2021-02-20 17:04 GMT
விழுப்புரம், 

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிற நிலையில் சிறிதும் செவிசாய்க்காமல் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாளும் மத்திய அரசை கண்டித்தும், வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையேற்றத்தை கண்டித்தும் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று காலை பாதயாத்திரை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து வளவனூர் வரை பாதயாத்திரை செல்ல காங்கிரசார் முடிவு செய்தனர். இப்போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பாதயாத்திரை போராட்டத்தை நடத்த காங்கிரசார், ரெயில் நிலைய வளாகத்தில் திரண்டனர்.

ஆர்ப்பாட்டம்

அங்கு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மேலிட பொறுப்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான சிரஞ்சீவி, இணை பொறுப்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான வக்கீல் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி பாதயாத்திரை செல்ல முயன்றனர். உடனே விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, பாலசிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 46 பெண்கள் உள்பட 172 பேரை கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்