தர்மபுரி மாவட்டத்தில் 43 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

தர்மபுரி மாவட்டத்தில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 43 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2021-02-20 16:55 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 43 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
கண்காணிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள் ஆகியோருக்கு உதவும் வகையில் புன்னகையை  தேடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. காணாமல் போன குழந்தைகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி ஆகியோர் தலைமையில் சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன் ஆகியவற்றின் சார்பில் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த குழுவினர் அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் ஆய்வு செய்தனர்.
43 பேர் மீட்பு
இந்த கண்காணிப்பு பணியின்போது காணாமல் போன 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் மீட்கப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 43 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 30 பேர் உரிய எச்சரிக்கை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 4 சிறுவர்கள் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டு படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் 9 சிறுவர்கள் சேர்க்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்