விழுப்புரத்தில் சார்பதிவாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
விழுப்புரத்தில் சார்பதிவாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு பெரியார் நகரை சேர்ந்தவர் ரத்தினசாமி மனைவி சத்யப்பிரியா (வயது 40). இவர் திருவெண்ணெய்நல்லூரில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது காரில் விழுப்புரம் நேருஜி சாலையிலுள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வந்து அங்கு காரை நிறுத்திவிட்டு மளிகை பொருட்களை வாங்கச்சென்றார்.
அங்குள்ள கடையில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு அதனை காரில் வைத்துள்ளார். பின்னர் அதே வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றுள்ளார். அங்கு துணிமணிகளை வாங்கிக்கொண்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின்பக்க வலதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து திடுக்கிட்ட அவர் காருக்குள் ஏறி பார்த்தபோது அங்கு வைத்திருந்த பையை காணவில்லை. அதிலிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பயன்படுத்தாத ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முத்திரைத்தாள் ஆகியவை திருட்டுப்போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்குள்ள வளாகத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதோடு, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.