நாசரேத்தில் ஜவுளிக்கடையில் பணம் திருட்டு

நாசரேத்தில் ஜவுளிக்கடையில் பணத்தை வாலிபர் ஒருவர் திருடி சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-02-20 16:42 GMT
நாசரேத்:

நாசரேத் 5-வது தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 71). இவர் நாசரேத்-மர்காஷிஸ் ரோடு பகுதியில் கூட்டுறவு வங்கிக்கு எதிரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலையில் இவரது கடைக்கு சென்ற டிப்-டாப் உடை அணிந்த வாலிபர் தனக்கு 6 தலையணைகள் தருமாறு கூறினார். அப்போது தர்மராஜ் தனது கடையில் 4 தலையணைகள் இருப்பதாகவும், அருகில் உள்ள தனது வீட்டில் இருந்து 2 தலையணைகளை எடுத்து வருவதாகவும் கூறிச் சென்றார்.

அப்போது அந்த வாலிபர், ஜவுளிக்கடையில் மேஜையில் இருந்த ரூ.9 ஆயிரத்து 400-ஐ நைசாக திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். வீட்டில் இருந்து தலையணைகளை எடுத்து வந்த தர்மராஜ், அங்கு வாலிபர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் அவர் கடையில் இருந்த மேஜையை திறந்து பார்த்தபோது, பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில், வாலிபர் மேஜையில் இருந்த பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவுளிக்கடையில் பணத்தை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்