காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
தேனி:
தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் பழனிசெட்டிபட்டியில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழனிசெட்டிபட்டியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.
அங்கிருந்து பஸ் நிறுத்தம் வழியாக கம்பம் சாலையில் பூதிப்புரம் சாலை சந்திப்பு வரை ஊர்வலம் நடந்தது.
பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, தேனி வட்டார தலைவர் முருகன், தேனி நகர தலைவர் முனியாண்டி மற்றும் மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின் போதும், ஆர்ப்பாட்டத்தின் போதும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் காங்கிரசார் கோஷங்கள் எழுப்பினர்.