சட்டசபை தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை சேலம் மாநகர புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி

சேலம் மாநகர புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி

Update: 2021-02-20 01:02 GMT
சேலம்:
வருகிற சட்டசபை தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாநகர புதிய போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் கூறினார்.
போலீஸ் கமிஷனர்         பொறுப்பேற்பு
சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் சென்னை வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். சென்னை நிர்வாகப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ்குமார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் சந்தோஷ்குமார் நேற்று சேலம் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அவரை போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடும் நடவடிக்கை
இதையடுத்து புதிய போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகரில் பணியாற்றுவது எனக்கு புதிய அனுபவமாக இருக்கும். சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சேலத்துக்கு வருவதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக காவல் துறையில் பெண்களின் பங்கு சிறப்பாக உள்ளது. விழுப்புரத்தில் நான் பணியாற்றிய போது 45 சதவீத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிறப்பாக பணிபுரிந்தார்கள்.
விரைவில் பிடிப்போம்
சேலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நகைக்கடை உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம். ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்