ஆத்தூரில், வீட்டுக்குள் புகுந்து 2 பெண்களிடம் கத்திமுனையில் 10 பவுன் நகை, பணம் கொள்ளை

ஆத்தூரில் வீட்டுக்குள் புகுந்து 2 பெண்களை கத்திமுனையில் மிரட்டி 10 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2021-02-20 00:16 GMT
 மேலும் அடுத்தடுத்து நடந்த தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட கோட்டை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 41). லாரி டிரைவர். இவருடைய வீடு அந்த பகுதியில் தனியாக உள்ளது. இந்த நிலையில் மணி வேலைக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு மணியின் மனைவி அமராவதி (வயது 35) மற்றும் மாமியார் ருக்குமணி ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டின் பின்புற கதவை உடைத்துக்கொண்டு 25 வயது மதிக்கத்தக்க 6 வாலிபர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அமராவதி, ருக்குமணி ஆகியோரிடம் கத்தி மற்றும் உருட்டுக்கட்டையை காட்டி பணம், நகை எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டினார்கள். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

செல்போன் கடை
இதேபோல ஆத்தூர் ராணிப்பேட்டை அனந்தர் தெரு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் சந்துரு. இவரது செல்போன் கடை ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள  செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றனர்.இந்த நிலையில் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள ஒரு இரும்பு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்றனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மக்கள் அச்சம்
இந்த 3 சம்பவங்கள் தொடர்ந்து தனித்தனியாக ஆத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆத்தூரில் அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்