புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கிராம நிர்வாக அதிகாரி பலி

தா.பேட்டை அருகே புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கிராம நிர்வாக அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-02-19 21:34 GMT
தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பெருகனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் விஜயகுமார் (வயது 28). மேட்டுப்பாளையம் - மோருப்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக வேலைபார்த்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று இரவு வேலை முடிந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து தா.பேட்டை நோக்கி விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் தூக்கிவீசப்பட்ட விஜயகுமார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வருவாய்த்துறை மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்