50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி
கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தரகம்பட்டியில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் தலைமை தாங்கினார்.கிருஷ்ணராயபுரம் கீதா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் மற்றும் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் தற்போது சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் தான் நடக்கும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். பொய்யை மட்டுமே கூறி முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். அவரது கனவு பலிக்காது. தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. அதற்கு இளைஞர் பட்டாளங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்காகத்தான் குடும்பம் குடும்பமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முதல்-அமைச்சர் காப்பாற்றி உள்ளார். கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களையும் வழங்கி உள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு விவசாயம் செழித்து வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளைஞர் படையுடன் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. எனவே இளைஞர்கள், நிர்வாகிகள் தமிழக அரசின் திட்டங்களை வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கடவூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், காக்காவாடி தினேஷ் சத்யராஜ், ஜீவா, புலியூர் பாலு, சிவகுமார், ஸ்ரீதர் ராஜா, விக்னேஷ், தனுஷ் வெங்கட், சுரேஷ், நிஷாந்த், சதீஷ், பொன்னுசாமி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.