கல்குவாரியில் மூழ்கி சிறுவன் பலி

காணியாளம்பட்டி அருகே கல்குவாரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.

Update: 2021-02-19 19:51 GMT
வெள்ளியணை:
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, லந்தக்கோட்டை கிராமம் சீரங்கம்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (வயது 16). இவன், தனது தம்பி குமார் (7) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து தனது ஊரின் அருகில் உள்ள கடவூர் தாலுகா காணியாளம்பட்டியை அடுத்துள்ள வீரியபட்டி பகுதியில் உள்ள பழைய கல்குவாரியில் நேற்று மதியம் குளிக்க சென்றான். முதலில் தண்ணீரில் இறங்கி குளிக்க முயன்ற கண்ணன், ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினான். இதனை பார்த்து மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டு அப்பகுதியில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
 இதனையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மாயனூர் போலீசார் மற்றும் குஜிலியம்பாறை தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் கல்குவாரியில் இறங்கி சிறுவனை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு சிறுவனை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்