களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது.

Update: 2021-02-19 19:08 GMT
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது. 

புலிகள் கணக்கெடுப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் ஈடுபடுகின்றனர். இவர்கள் 20 குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். வருகிற 28-ந் தேதி வரை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.

இன்று பயிற்சி முகாம் 

கணக்கெடுப்பு குழுவினர்களுக்கு இன்று (சனிக்கிழமை) களக்காடு தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது எப்படி? என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்பின் அவர்கள் களக்காடு, திருக்குறுங்குடி கோதையாறு வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவர்கள் வனவிலங்குகளை நேரில் காண்பது, எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துவார்கள். 
கணக்கெடுப்பு பணிக்கு செல்போன் ஆப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் சேகரிக்கும் கால்தடங்கள், எச்சங்கள் மற்றும் தானியங்கி கேமராவில் பதிவாகும் படங்கள் அனைத்தும் ஆய்வுக்காக டெல்லிக்கு அனுப்பப்படும்.  

சுற்றுலா பயணிகளுக்கு தடை

புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதால் இன்று முதல் 28-ந் தேதி வரை தலையணைக்கும், திருக்குறுங்குடி வனப்பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்