செந்துறை அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1 லட்சம் பறிப்பு
செந்துறை அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செந்துறை:
டாஸ்மாக் ஊழியர்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள படைவெட்டிக்குடிக்காடு கிராமத்தில் வயல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக பரமசிவம், விற்பனையாளராக வேல்முருகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு மது விற்பனை முடிந்த பின்னர், அன்றைய வசூலான ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பணம் பறிப்பு
வழியில் வயல் பகுதியில் மறைந்திருந்த 3 பேர், திடீரென வந்து உருட்டுக்கட்டையால் பரமசிவம், வேல்முருகனை தாக்கினர். இதில் நிலை குலைந்த 2 பேரும் கீழே விழுந்தனர். இதையடுத்து 3 பேரும், பரமசிவம் வைத்து இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் குவாகம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.