திண்டுக்கல்லில் வாழை இலை விலை கிடு, கிடு உயர்வு
வரத்து குறைவு எதிரொலியாக, திண்டுக்கல்லில் வாழை இலை விலை கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கட்டு வாழை இலை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.
திண்டுக்கல்:
வரத்து குறைவு எதிரொலியாக, திண்டுக்கல்லில் வாழை இலை விலை கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கட்டு வாழை இலை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.
வாழை சாகுபடி
திண்டுக்கல் குடகனாறு சுற்று வட்டார பகுதிகளான சித்தையன்கோட்டை, மைலாப்பூர், ஆத்தூர், அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைக்காய்களுக்காக மட்டுமின்றி, இலை விற்பனைக்காகவும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வாழை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபடுவர்.
இலைகள் சேதம்
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை சாகுபடி பணிகள் தொடங்கப்படவில்லை. அதன் பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
ஆனால் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வாழை மரங்கள், இலைகள் அதிக அளவில் சேதமடைந்தது. இதனால் திண்டுக்கல்லில் உள்ள வாழை இலை மொத்த விற்பனை கடைகளுக்கு வரத்து குறைந்தது.
விலை உயர்வு
இதன் காரணமாக இலைகளின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்பட்ட 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு, தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது.
இவ்வாறு விற்பனை ஆகும் இலைகளும் சாப்பாட்டு இலை, டிபன் இலை என 2 வகையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு சாப்பாட்டு இலை ரூ.2 முதல் ரூ.3-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. ரூ.2-க்கு விற்கப்பட்ட ஒரு டிபன் இலை தற்போது ரூ.4-க்கு விற்கப்படுகிறது.
தொடர்மழை, பனிப்பொழிவு
இதுகுறித்து வாழை இலை மொத்த வியாபாரியான திண்டுக்கல்லை சேர்ந்த செந்தில்குமார் கூறும்போது, கொரோனா ஊரடங்கு, பனிப்பொழிவு, தொடர் மழை ஆகிய காரணங்களால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது.
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் வாழை இலை 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் இங்கு சாகுபடியாகும் வாழை இலைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் தற்போது வரத்து குறைந்ததால் வாழை இலையின் விலை அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் இந்த விலை உயர்வு எங்களுக்கு போதுமானதாக இல்லை. திண்டுக்கல்லில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு மட்டுமின்றி, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வாழை இலைகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
--------