திருமங்கலம் கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்ட தடை கோரி வழக்கு

கண்மாய்கள் பல்வேறு கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன.

Update: 2021-02-19 16:47 GMT
மதுரை, 

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வபாண்டி, மாரி, பரமசிவம் உள்பட 9 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “சிவரக்கோட்டை கண்மாய், புளியங்குளம் கண்மாய், புதுப்பேட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் பல்வேறு கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இந்த கண்மாய்களை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த கண்மாய்களுக்கு அங்குள்ள கவுண்டன் ஆற்றுப்படுகையில் இருந்தும் தண்ணீர் வரத்து உள்ளது.

இந்நிலையில், திருமங்கலம் திரளி கிராமப்பகுதியில் கவுண்டன் ஆற்றை மறித்து சுமார் 2.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக புளியங்குளம் கண்மாய், சிவரக்கோட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து தடைபடும் நிலை உள்ளது. குடிநீரை பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. அதனை ஒரு சாராருக்கு மட்டும் கிடைக்கும் வகையில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை திருமங்கலம் திரளி கிராமப்பகுதியில் கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  விசாரணையை மார்ச் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்