பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே காடாம்புலியூாில் உள்ள கும்பகோணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு முந்திரி கொட்டையின் மேல் உள்ள தோட்டில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் இந்த எண்ணெயில் இருந்து மாற்று பொருளாக பவுடர் தயாரிக்கப்படுகிறது. இந்த பவுடர் பெயிண்ட், வாகன டயர்கள், பிரேக்லைனர் போன்றவைகள் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
கரும்புகை மண்டலம்
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 11 மணியளவில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்து, வெளியே வந்தனர். தொழிற்சாலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த முந்திரி தோடு மூட்டைகள், முந்திரி எண்ணெய் ஆகியவை தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பரபரப்பு
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை நோில் பார்வையிட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முந்திரி எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.