இலந்தைப்பழ பொடி என நினைத்து பேன் மருந்தை தின்ற சிறுமி பலி
பழனி அருகே இலந்தைப்பழ பொடி என நினைத்து பேன் மருந்தை தின்ற சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
பழனி:
பழனி அருகே உள்ள பச்சளநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அர்ச்சுனன். கூலி்த்தொழிலாளி. அவருடைய மகள் பவஸ்ரீ (வயது 12). இவள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு பவஸ்ரீ, தனது வீட்டின் அலமாரியில் இருந்த பேன் மருந்தை இலந்தைப்பழ பொடி என நினைத்து தின்று விட்டாள்.
சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவள், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி பவஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.