ஊத்துக்குளி அருகே பரபரப்பு சம்பவம்: கத்திமுனையில் முதியவரிடம் நகை, ரூ.74 ஆயிரம் கொள்ளை மர்ம ஆசாமிகள் 2 பேர் கைவரிசை
ஊத்துக்குளி அருகே முதியவரிடம் கத்தி முனையில் நகை மற்றும் ரூ.74 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் 2 பேர் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி அருகே முதியவரிடம் கத்தி முனையில் நகை மற்றும் ரூ.74 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் 2 பேர் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை, பணம் கொள்ளை
ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் மானூர் நெல்லியான் தோட்டத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 78). இவர் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகள் திருப்பூரில் குடியிருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் நடராஜன் இருந்தார். அப்போது 30 வயது மதிக்க 2 ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், நடராஜனை கொலை செய்து விடுவதாக மிரட்டி அவர் அணிந்து இருந்த தங்க மோதிரத்தை கழற்றுமாறு கூறினர். இதனால் பயந்து போன நடராஜன் தான் அணிந்து இருந்த 6 கிராம் மோதிரத்தை கழற்றி அந்த ஆசாமிகளிடம் கொடுத்தார். பின்னர் அவரை கத்தி முனையில் மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் அழைத்து சென்றனர். பின்னர் வீ்ட்டின் பீரோவில் இருந்த ரூ.74 ஆயிரத்தை அந்த ஆசாமிகள் கொள்ளையடித்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு நடராஜன் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் சென்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியின் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். ஊத்துக்குளியில் முதியவரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.