பரிதவிப்போடு கதிர் அறுக்கும் விவசாயிகள்

மழை பெய்து கெடுத்ததால் பரிதவிப்போடு விவசாயிகள் கதிர் அறுவடை செய்து வருகின்றனர்.

Update: 2021-02-19 16:17 GMT
நயினார்கோவில், 
மழை பெய்து கெடுத்ததால் பரிதவிப்போடு விவசாயிகள் கதிர் அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்து பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இந்தநிலையில் ராமநாதபுரம் ஆர்.காவனூர் பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இயற்கை விவசாயி வான் தமிழ் இளம்பரிதி கூறும்போது, மழை பெய்யாமல் கெடுக்கும், பெய்தும் கெடுக்கும் என்பார்கள்.  தற்போது மழை பெய்தும் கெடுத்துவிட்டது என்ற மனநிலையில் உள்ளோம். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த நெல் மற்றும் மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளோம். 
வழக்கமாக 50 மூடை நெல் கிடைக்கக்கூடிய இடத்தில் வெறும் 10 மூடைதான் கிடைத்துஉள்ளது. சிலருக்கு அறுவைக்கு கொடுக்கக்கூடிய கூலிக்குகூட பலன் கிடைக்கவில்லை. அறுவடை செய்யக்கூடிய எந்திரத்தின் வாடகையும் வழக்கத்தைவிட கூடுதலாக உள்ளது. அவர்களும் டீசல் விலை உயர்ந்து விட்டது, வாடகை கட்டாது என கூறுகின்றனர். இதனால் பல விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே உள்ளனர். சில இடத்தில் விவசாயிகள் பயிர்செய்த மிளகாய், நெல்லும் சேதமாகி உள்ளது.

மனவேதனை

 இருக்கின்ற தண்ணீருக்கு ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்து பருத்தியை பயிரிடுவோம் என பயிரிட்டு வருகின்றனர். இழப்பீடாவது கிடைக்குமா என தெரியவில்லை. அனைவரும் மனவேதனையில் உள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்