வழிப்பறி கொள்ளையர்களால் விபத்து பஸ்கள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 5 பேர் காயம்

வழிப்பறி கொள்ளையர்களால் விபத்து பஸ்கள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 5 பேர் காயம்.

Update: 2021-02-19 03:17 GMT
செங்கல்பட்டு, 

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால் அடிக்கடி அந்த பகுதியில் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதுண்டு. நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து மதுரைக்கு சென்ற லாரியை பழவேலி அருகே நடுரோட்டில் வழிமறித்த கொள்ளையர்கள் அதன் டிரைவர் சரவணனை சரமாரியாக தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டனர்.

அப்போது லாரியை பின்தொடர்ந்து வந்த தனியார் தொழிற்சாலை பஸ்சும், ஒரு ஆம்னி பஸ்சும் நடுரோட்டிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பஸ்களை பின்தொடர்ந்து வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த 2 பஸ்கள் மீது மோதியதுடன், சாலையோரம் இருந்த மலை மீது ஏறி ஆம்னி பஸ்சின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் ஆம்னி பஸ்சின் ஒரு பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் 5 பேர் காயம் அடைந்தனர். பஸ்சில் கவிழ்ந்தபடி நின்ற கன்டெய்னர் லாரியை கிரேன் உதவியுடன் போலீசார் மீட்டனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்