திருப்பூரில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு

திருப்பூரில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு

Update: 2021-02-18 21:04 GMT
அனுப்பர்பாளையம்:-
திருப்பூரில் தம்பதியை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகன்மேல் உள்ள ஆத்திரத்தில் பெற்றோரை வெட்டி சாய்த்தது அம்பலமாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முன்விரோதம்
திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை அடுத்த கிருஷ்ணா தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 49). இவருடைய மனைவி சாகிதா பானு (44). இவர்களுடைய மகன் முகமது ரியாஸ் (21). கடந்த 15-ந்தேதி முகமது ரியாஸ் அவருடைய நண்பர்களான முத்து உள்ளிட்ட 4 பேருடன் அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். 
அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவருக்கும் முகமது ரியாஸின் நண்பரான முத்துவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முகமது ரியாஸ், முத்து மற்றும் அவருடைய நண்பர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து சதீஸ், அவருடைய நண்பர்களான ஜேம்ஸ் (30), ராஜேஷ், குமார் ஆகிய 4 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 
அரிவாள் வெட்டு
இதனால் சதீஸ், ஜேம்ஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் முகமது ரியாஸ் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சதீஸ், ஜேம்ஸ், ராஜேஷ், குமார் ஆகியோர் முகமது ரியாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு முகமது ரியாஸின் தந்தை முகமது முஸ்தபா, தாயார் சாகிதா ஆகியோர் வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ஜேம்ஸ் தரப்பினர் வீட்டை தட்டி உள்ளனர். தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த முகமது முஸ்தபா வீட்டில் இருந்து கொண்டே யார்? என்று கேட்டுள்ளார். 
அதற்கு நாங்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகி விட்டது. எனவே வாடகைக்கு கார் வேண்டும் என்று வெளியில் இருந்து கூறி உள்ளனர். இதை நம்பி  முகமது முஸ்தபா  கதவை திறந்தார். 
அப்போது ஜேம்ஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து உன் மகன் எங்கே? என்று கேட்டபடியே தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முகமது முஸ்தபாவை தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார்கள். இதை கண்டு தடுக்க வந்த சாகிதா பானுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரையும் வெட்டி, ஆத்திரம் அடங்கிய நிலையில் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
 ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கணவன், மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும், இதன் பின்பு இருவரும் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் முன்விரோதம் காரணமாக முகமது ரியாசை பழி வாங்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவருடைய பெற்றோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது தெரிய வந்தது. 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார் ஜேம்ஸ், சதீஸ், ராஜேஷ், குமார் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்