கணவரின் சொத்துகளை அபகரித்து கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்
கணவரின் சொத்துகளை அபகரித்து கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு கொடுத்தார்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 31). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், கட்சி நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் கரூர் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். எனது கணவரின் உறவினர் ஒருவர் எனது கணவர் பெயரில் டிராக்டர் ஒன்றை எடுத்து தருமாறு கூறினார். அந்த டிராக்டரை நான் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன் உங்களுக்கு மாதம் மாதம் பணம் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
இதை நம்பி நான் ரூ.1 லட்சம் மற்றும் எனது கணவரின் பெயரில் வங்கியில் 10 பவுன் நகையை அடமானம் வைத்து பணம் கொடுத்தேன். இதற்கிடையில் எனது கணவர் உடல்நலம் சரியில்லாமல் திடீரென இறந்துவிட்டார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எனது கணவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் அவர் அபகரித்துக் கொண்டார்.
மேலும் மற்றொரு உறவினர் மகன் என் கணவருக்கு சேரவேண்டிய சொத்துகளுக்கு நான்தான் வாரிசு என்றும் உங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் கூறி வருகிறார். எனக்கும், என் கணவருக்கும் சொந்தமான பொருட்களையும், வாகனங்களையும் தருமாறு பலமுறை கேட்டும் அவர்கள் தராமல் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எனது கணவரிடம் இருந்து அபகரித்து கொண்ட பணம், நகை, இருசக்கர வாகனம் மற்றும் சொத்துகளை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் அவா் கூறி உள்ளார்.