மூலைக்கரைப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
மூலைக்கரைப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
பஸ்சில் சென்ற பெண்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் நயினாா் மனைவி ஆறுமுகம் அம்மாள் (வயது 56). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நயினார் இறந்து விட்டதால் ஆறுமுகம் அம்மாள் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் வள்ளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு ஊருக்கு செல்வதற்காக முனைஞ்சிப்பட்டியில் இருந்து அரசு பஸ்சில் சென்றுள்ளார்.
பஸ் முனைஞ்சிப்பட்டியில் இருந்து சிந்தாமணி செல்லும் வழியில் ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க வாசல் வழியாக அவர் தவறி கீழே விழுந்தார்.
பரிதாப சாவு
இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆறுமுகம் அம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.