புதிய தொழில் கொள்கையால் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-அமைச்சர் எம்சிசம்பத்
புதிய தொழில் கொள்கையால் ஆண்டுக்கு 15 சதவீதம் வளர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் எம்சிசம்பத் தெரிவித்துள்ளார்.
கடலூா்:
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா காலத்திலும் தமிழகத்தில் 73 முதலீட்டாளர்கள் ரூ.60 ஆயிரத்து 634 கோடி முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் 1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டாடா நிறுவனம் ஓசூரில் ரூ.5 ஆயிரம் கோடியில் மொபைல் தொடர்பான நிறுவனத்தை தொடங்க உள்ளது. இதனால், 18,500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுக்கோட்டையில் ஐ.டி.சி. நிறுவனம் தனது ஆலையை விரிவாக்கம் செய்திட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தற்போது 2021-ம் ஆண்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய தொழில் கொள்கையை அறிவித்துள்ளார். இந்த புதிய தொழில்கொள்கையின் படி ஆண்டுக்கு 15 சதவீதம் தொழிற்துறை வளர்ச்சியடைய வேண்டும் என்பதே இலக்கு. இதன் மூலமாக 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
சிப்காட் அமைத்திட நடவடிக்கை
இதற்காக சிப்காட் அமைப்பினை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மானலூர், தர்மபுரி, மணப்பாறை, ஓரகடம் ஆகிய 4 இடங்களில் புதியதாக சிப்காட் அமைத்திட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் ஓரகடம் மட்டுமே சிப்காட் விரிவாக்கமாகும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, 42 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துக் கொண்டதில் 28 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை ஏ பிரிவாகவும், சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களை பி பிரிவாகவும் மற்ற 22 மாவட்டங்களை சி பிரிவாகவும் பிரித்து, அதற்கேற்ப தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து வருகிறோம். சி பிரிவில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கூடுதலாக மானியம் வழங்குதல், நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியம், மின்சாரத்தில் மானியம், முத்திரைத்தாளில் மானியம் வழங்குகிறோம். இவ்வாறு பல்வேறு சலுகைகள் மூலமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களையும் தமிழகத்திற்கு நாம் ஈர்த்து வருகிறோம் என்றார்.