ஜோலார்பேட்டையில்,ரெயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்த வடமாநில வாலிபரால் பரபரப்பு.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் ெரயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-18 11:57 GMT
ஜோலார்பேட்டை

ரெயில் என்ஜின்மீது...

கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

ரெயில் நின்ற சிறிது நேரத்தில் அதே ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் என்ஜின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். இதை அறிந்த என்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் அவரை கிழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் கிழே இறங்க மறுத்துவிட்டார்.

மின்சாரம் துண்டிப்பு

உடனடியாக இதுகுறித்து ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், ரெயில் இயக்கப்படும் மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர்.

பின்னர் அவரை கீழே இறக்க சொல்லியும் அந்த வாலிபர் இறங்கவில்லை. அதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில் என்ஜின் மீது ஏறி அந்த வாலிபரை கிழே இறக்கி, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வடமாநில வாலிபர்

அவரிடம் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த ராக்வாரியா என்பவருடைய மகன் விவேக் (வயது5) என்பதும், சாதாரண டிக்கெட் எடுத்து, முன் பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் கோச் பெட்டியில் பயணம் செய்ததும், இதனால் டிக்கெட் பரிசோதகர், அவருக்கு ரூ.850 அபராதம் விதித்திருந்ததும் தெரியவந்தது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் ரெயில் என்ஜின் மீது ஏறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு ெரயில்வே போலீசார் உணவு வாங்கி கொடுத்து, மற்றொரு ரெயிலில் அவரது சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளனர். 

பரபரப்பு

இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில் என்ஜின் மீது வாலிபர் ஒருவர் ஏறி அமர்ந்த சம்பவம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்