நடப்பாண்டில் 12 கோடி பேர் வேலை இழப்பு
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நடப்பாண்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
காரைக்குடி,
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நடப்பாண்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் பட்ஜெட் மீதான மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள், ஊடகங்கள் மூலமாக கேள்வி எழுப்பிய அறிஞர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய நான், கபில்சிபல் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் மீதான வரி முறைகளில் மாற்றம் இருப்பதாக ஒரு வார்த்தை கூட கிடையாது.அச்சடித்த உரை கொடுக்கப்படவில்லை என்பதால் பின்னர் அவை சேர்க்கப்பட்டிருக்கலாம். பிறகு நிதி மந்திரியிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதா? என நிருபர்கள் கேட்டபோது பதிலளித்த நிதி மந்திரி, கலால் வரியை குறைத்து செஸ் வரியை உயர்த்தி ஈடு செய்து இருக்கிறோமே தவிர விலை உயர்வு இல்லை என்றார். ஆனால் அதற்கு அடுத்த 3-வது நாளே பெட்ரோல் லிட்டர் 90 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 83 ரூபாய்க்கும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன் என்று கேட்டதற்கு மத்திய நிதி மந்திரி பதில் அளிப்பதில்லை.
12 கோடி பேர் வேலை இழப்பு
நமது நாட்டில் 11 கோடி சிறு,குறு தொழில்கள் உள்ளன. இதில் 3½ கோடி சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு விட்டன. இதனை அந்த அமைப்பை சேர்ந்த அதிகாரபூர்வமான அறிவிப்பே தெரிவிக்கிறது. இதனை திறப்பதற்கு என்ன முயற்சி? வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பை பெறுவதற்கு என்ன வழி என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நடப்பாண்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 6 கோடியே 47 லட்சம் பேர் வேலை தேடுவதையே விட்டு விட்டனர். வேலை வேண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 2 கோடியே 80 லட்சம் பேர். இழந்த வேலையைப் பெறவும் புதிய வேலைவாய்ப்பை பெறவும் என்ன வழி? என்ற கேள்விக்கும் மத்திய நிதி மந்திரியிடம் பதில் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கார்த்திக் சிதம்பரம் எம்.பி., கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. மாவட்ட துணைத்தலைவர் மாங்குடி ஆகியோர் உடனிருந்தனர்.
சிவகங்ைக
சிவகங்கை வட்டார காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசும் போது,
கடந்த 10 ஆண்டு ஆட்சி செய்த அ.தி.மு.க. கடைசி 3 மாதத்தில் தான் சுற்றி சுற்றி பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்கள்.இதற்கு எந்த பயனும் கிடையாது. ஒரு திட்டம் முற்று பெற்றால் தான் சாதனை. வெறும் அறிவி்ப்பில் எந்த சாதனையும் கிடையாது. மக்களை எளிதில் ஏமாற்ற முடியாது. இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து, என்ற அறிவிப்புக்கள் வந்துள்ளன.ஆனால் அதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.அ.தி.மு.க. ஆட்சியில் நமக்கு எந்த பயனும் இல்லை. 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓய்வு தர வேண்டும். நமது கூட்டணி ஆட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.