போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகையை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நலச்சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் 6-வது ஆண்டு பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அந்த சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பச்சையப்பன், பொருளாளர் சூர்யகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அச்சங்கத்தின் மத்திய தலைவர் மருதமுத்து, பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 62 மாதங்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வையும், நிலுவை தொகையையும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பயன்களை வழங்கிட வேண்டும். மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பெரம்பலூர் நகர்ப்புற அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் அரசு டாக்டர் வளவன், பொன்.கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.