சின்ன வெங்காயம் கிலோ ரூ 150 க்கு விற்பனை
திண்டுக்கல்லில் வரத்து குறைவு, வாடகை கட்டணம் உயர்வு எதிரொலியாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனையானது
திண்டுக்கல்:.
சின்ன வெங்காயம்
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே வெங்காய சந்தை செயல்படுகிறது
. இந்த சந்தைக்கு ஒட்டன்சத்திரம், பழனி, ரெட்டியார்சத்திரம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களான தேனி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர் திண்டுக்கல்லில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம் தண்ணீரில் மூழ்கியது.
மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வெங்காயம் அழுகி நாசமானது. இதனால் சின்ன வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
தினமும் 500 டன் வரத்து காணப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது 100 டன் மட்டுமே சந்தைக்கு வருகிறது.
விலை உயர்வு
அதுவும் மைசூர், ராசிபுரம் பகுதிகளில் இருந்து மட்டுமே சின்ன வெங்காயம் வருகின்றனர்.
ஆனால், வழக்கமான ஊர்களில் இருந்து மிகவும் குறைந்த அளவே வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மாதத்தின் இறுதியில் இருந்தே விலை உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக லாரி வாடகை கட்டணம் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.
அதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையான சின்ன வெங்காயம் நேற்று ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. மேலும் பல்லாரி வெங்காயத்தை பொறுத்தவரை கடந்த வாரம் ரூ.35-க்கு விற்பனை ஆனது.
தற்போது ரூ.55-க்கு விற்பனை ஆகிறது. இந்த நிலை நீடித்தால் வெங்காயம் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்