சாமிதோப்பு அருகே அபூர்வ பறவை பிடிபட்டது
சாமிதோப்பு அருகே அபூர்வ பறவை பிடிபட்டது
தென்தாமரைகுளம்,
சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு கரும்பாட்டூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் தன்னுடைய வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது காகங்களால் துரத்தப்பட்டு வந்த அபூர்வ பறவை ஒன்று வேகமாகப் பறந்து வந்து சந்திரசேகர் வீட்டு முன் விழுந்தது. இதைப் பார்த்த சந்திரசேகர் ஓடிச்சென்று பறவையை பிடித்தார். அப்போது பறவையின் உடலில் காயங்கள் இருந்தன. சந்திரசேகர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த பறவையை கைப்பற்றினர். அது வெளிநாட்டு அபூர்வ பறவை வகையை சேர்ந்தது என்பது தெரியவந்தது. பின்னர் அதற்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பறவையை வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்றனர். அந்த அபூர்வ பறவையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.