மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம்
மின்னணு குடும்ப அட்டை பெற மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் 9 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடந்தது.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாக நேற்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய 9 தாலுகாக்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
மின்னணு குடும்ப அட்டை
இம்முகாமில் இதுவரை மின்னணு குடும்ப அட்டை இல்லாத 18 வயது பூர்த்தியடைந்த மூன்றாம் பாலினத்தவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரச்சான்று ஆகியவற்றுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் கலந்துகொண்டு இணையதளம் மூலம் மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தனர்.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த இம்முகாமில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அன்பழகன், தனி வருவாய் ஆய்வாளர் நவீன்குமார் ஆகியோர், மூன்றாம் பாலினத்தவர்களிடம் இருந்து மின்னணு குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை பெற்று இணையதளத்தில் பதிவு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது நடந்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.