கோவிலுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய 3 பேர் கைது
பெரியகுளம் அருகே கோவிலுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 5-ந்தேதி இரவு இந்த கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், அம்மன் சிலையின் ஐம்பொன் கவசம், நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து கோவில் பூசாரி முருகன் கொடுத்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோவிலில் கொள்ளையடித்த மர்மநபர்களை கண்டுபிடிக்க பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் பெரியகுளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பாண்டியன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெரியகுளம் அருகே கும்பக்கரை சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த பெரியகுளம் வடகரை வடக்கு பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சந்திரசேகர் (வயது 21), சங்கரன் மகன் டேவிட் பிரசாத் (29) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் 2 பேரும் பெருமாள்புரம் காளியம்மன் கோவிலுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சந்திரசேகர், டேவிட் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், இதில் தொடர்புடைய வடக்கு பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த ஜான் மகன் விஜயகுமார் (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இருந்து அம்மன் சிலையின் ஐம்பொன் கவசம், 2 பவுன் நகை, ரூ.17 ஆயிரம், வெள்ளி கொலுசுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.