நோய் கொடுமையால் தம்பதி தற்கொலை
வேடசந்தூர் அருகே, நோய் கொடுமையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55).
இவர், அதே பகுதியில் உரக்கடை நடத்தி வந்தார்.
அவருடைய மனைவி தமிழரசி (46).
இந்த தம்பதிக்கு பிரியங்கா (20) என்ற மகளும், செல்வம் (17) என்ற மகனும் உள்ளனர்.
பிரியங்கா கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
செல்வம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
கணவன்-மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
நோய் கொடுமையால் அவதி
கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் தண்டபாணி அவதிப்பட்டார்.
இதற்காக அவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருதய அறுவை சிகிச்சை செய்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை.
இதனால் தண்டபாணி மனம் உடைந்து காணப்பட்டார்.
இதேபோல் தன் கண்ணெதிரே கணவர் நோயால் கஷ்டப்படுவதை கண்டு தமிழரசியும் மனம் நொந்து போனார்.
நோய் கொடுமை தாங்க முடியாததால் கணவன்-மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தம்பதி தற்கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அவர்கள் 2 பேரும், எலிமருந்தை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்தனர்.
சிறிதுநேரத்தில் மயங்கிய தண்டபாணியும், தமிழரசியும் பரிதாபமாக இறந்தனர்.
இதற்கிடையே காலை 8 மணி வரை தண்டபாணியின் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மணிகண்டன் கதவை தட்டினார்.
ஆனால் கதவு பூட்டப்படவில்லை. சாத்தி கிடந்ததால், கதவை திறந்து உள்ளே சென்று மணிகண்டன் பார்த்தார்.
அப்போது தண்டபாணியும், தமிழரசியும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் தண்டபாணி, தமிழரசி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தண்டபாணியின் மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நோய் கொடுமையால் தம்பதி தற்கொலை செய்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.