முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு?
முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையேயான மோதல் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி கடைசி கட்ட மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதன் மீது விசாரணை நடத்தவும் கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். நிதியுதவி பெற்ற 62 பேரின் பட்டியலையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. 62 பேர் இந்த நிவாரண நிதியை பெற்றுள்ளனர். குறிப்பாக அவர்கள் அனைவரும் உடல் நலக்குறைவினை காரணம் காட்டி இந்த நிதியை பெற்றுள்ளனர்.
பொதுநிதியை முறைகேடாக வழங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் இதுதொடர்பாக ஆய்வு செய்ய தலைமை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு (தலைமை செயலாளர்) அதிகாரியை கேட்டுக்கொண்டுள்ளேன். வேறு முறைகேடுகள் இருந்தால் அதை அறிந்துகொள்ளவும் இயலும்.
இந்த நிதி தொடர்பாக அவசர சிறப்பு தணிக்கை கோரவும் தலைமை செயலாளரை கேட்டுள்ளேன். கடந்த காலங்களில் இவ்வாறு நிதி முறைகேடாக வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் முறையான ஆதாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த பணத்தில் அரசு ஊழியர்கள் வழங்கிய நிதியும் உள்ளது. இந்த பணம் அவசர தேவைக்கும் வழங்கப்படவில்லை. நிதியுதவிபெற்ற 62 நபர்களும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச மருத்துவ உதவியினை பெற்றிருக்கலாம்.
தலைமை செயலாளர் ஆய்வு தொடர்பாக 2 வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கை வழங்கவேண்டும். இந்த நிதி தொடர்பாக கடந்த காலங்களில் எப்போது தணிக்கை செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.