நலவாழ்வு முகாம்: சுட்டிக்குழந்தையைபோல் சுற்றிவரும் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில், சுட்டிக்குழந்தையைபோல் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி சுற்றிவருகிறது.

Update: 2021-02-12 22:43 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 8-ந் தேதி தொடங்கி 48 நாட்கள் நடக்கிறது. 

முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. அந்த யானைகளுக்கு மருத்துவ முகாம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

முகாமில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகிறது. இந்த கல்யாணி கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்து பாகன்கள் கூறியதை பார்க்காலம்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடந்த 14.10.1991-ம் ஆண்டு கல்யாணி யானை பிறந்தது. இதைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு பட்டீஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தற்போது யானைக்கு 29 வயது ஆகிறது. பாகன் ரவிக்குமார், உதவி பாகன் ராம்ஜிகுமார் ஆகியோரால் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 

கல்யாணி யானை மிகவும் சாதுவானது. ஆனால் அவ்வப்போது சுட்டிதனங்கள் செய்யும். ஆனால் சுற்றுப்புறத்தில் ஏதேனும் சத்தத்தை கேட்டால் கூட நமக்கு எதுக்கு வம்பு என்று அந்த இடத்தை விட்டு நைசாக தள்ளி சென்றுவிடும் அளவுக்கு அப்பாவியாகும். 

மேலும் இதுவரை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு ஒருமுறை கூட இடையூறு செய்தது கிடையாது. மொத்தத்தில் வீட்டில் இருக்கும் சுட்டிக்குழந்தையைபோல் அந்த யானை வலம்வரும்.

கோவிலில் நடைபெறும் கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தினசரி தவறாமல் கலந்து கொள்ளும். கல்யாணி யானைக்கு தர்பூசணி, முலாம்பழம், கரும்பு, ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவை பிடித்தமான உணவாகும். 

முகாமில் கலந்துகொண்ட  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி, யானை கல்யாணிக்கு நல்ல தோழியாக நட்புடன் இன்றுவரை பழகி வருகிறது. இரண்டு யானைகளும் கடந்த 8 ஆண்டுகளாக தோழமையுடனும், சகஜமுடனும் பழகி நல்ல நட்புக்கு இலக்கணமாக இன்றளவும் விளங்கி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரண்டு யானைகளும் எதிரெதிரே கட்டி வைத்திருப்பதால் நடைப்பயிற்சிக்கு செல்லும் போதும், குளிக்க செல்லும் போதும் ஒன்றையொன்றை நெருங்கி துதிக்கையால் தொட்டுத் தழுவி விளையாடி மகிழ்கின்றன. 

அவ்வப்போது மவுன மொழியில் பேசி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றன. யானைகளின் இந்த தோழமையை கண்டு முகாமில் உள்ளவர்கள் பரவசமடைகின்றனர்.

மேலும் செய்திகள்