25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி,
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் மற்றும் பிற அரசு துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் பிச்சை பிள்ளை, டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், நகர பொறுப்பாளர் சூரிய பிரகாஷ், சமூக நலத்துறை சேர்ந்த அருணாதேவி, நிர்வாகிகள் ராமலிங்கம், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் நேற்று பல ரேஷன் கடைகள் பூட்டி இருந்தன.