நியாயவிலைக்கடை பணியாளர்கள் சாலை மறியல்

பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கக் கோரி தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-12 20:56 GMT
தஞ்சாவூர்:
பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கக் கோரி தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல் 
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்றுகாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மறியல் போராட்டத்தில், பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். பணிவரன்முறை செய்யப்படாத 5 ஆயிரம் பணியாளர்களை எவ்வித நிபந்தனையின்றி பணிவரன் முறை செய்ய வேண்டும். நியாயவிலைக்கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 500 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு எடையாளர் நியமனம் செய்ய வேண்டும். 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். கொரோனாவுக்கு பலியான பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை 
கொரோ னா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மே மாதம் முதல் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பெண் பணியாளர்களை அவமானப்படுத்தும் மற்றும் பாலியல் தொந்தரவு செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நிதி பயன்களும் ஏ.டி.எம். மூலம் வழங்க வேண்டும்.
இருப்பு அதிகமாக இருக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு 3 மடங்கு அபராதம் விதிப்பு தவிர்க்கப்பட வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்குவதைபோல் மருத்துவபடியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
120 பேர் கைது 
இதில் மாவட்ட இணைச் செயலாளர் தனவேல், ராஜேந்திரன், நிர்வாகிகள் சக்திவேல், அரசு, அன்பழகன், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோ‌‌ஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 120 பேரை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்