சங்கரன்கோவிலில் தெப்ப திருவிழா
சங்கரன்கோவிலில் நேற்று இரவு தெப்ப திருவிழா நடந்தது.
சங்கரன்கோவில்;
சங்கரன்கோவிலில் நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தெப்பத்திருவிழா
சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது ஆவுடைப்பொய்கை தெப்பம். இந்த தெப்பத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், ஆன்மீக அமைப்புகள் புகார் கொடுத்த போதிலும் தற்போது நகராட்சி வசம் உள்ள இந்த தெப்பத்தில் நகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பெய்த கன மழையினால் தெப்பத்தில் தானாகவே தண்ணீர் நிறைந்தததை அடுத்து இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்மீக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெப்பத்திருவிழாவை நடத்த தீவிரமாக ஈடுபட்டனர். மழையால் தண்ணீர் நிறைந்ததாலும் சில நாட்களில் நீர்மட்டம் குறைந்து விட்டது. மீதமுள்ள தண்ணீருக்காக சுற்றி உள்ள தனியார் கிணறுகளிலிருந்து தண்ணீர் நிரப்பப்பட்டது.
பக்தர்கள் மகிழ்ச்சி
இந்நிலையில் பக்தர்கள் முழு முயற்சியால் நேற்று தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மாலை மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் 11 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 5 ஆண்டுகளுக்கு பின் தெப்பத்திருவிழா நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.