மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த விவசாயிகள்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க விவசாயிகள் திரண்டு வந்தனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவில் கோட்டியல், உடையார்பாளையம், அம்பாபூர், கல்லாத்தூர், உதயநத்தம் ஆகிய ஊர்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமான விவசாயிகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க திரண்டு வந்தனர். அப்போது அலுவலகத்திற்கு காரில் வந்த கலெக்டர் ரத்னா, காரில் இருந்து இறங்கி, கூட்டமாக விவசாயிகள் நிற்பதை பார்த்து அவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி என்று அரசு அறிவித்தது. ஆனால் உடையார்பாளையம் தாலுகாவில் 5 ஊர்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடந்த மாதம் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே அந்த வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள், அவரிடம் மனு அளித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.