டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகை

செஞ்சி அருகே டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-12 17:34 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே வடதாரம் கிராமத்தில் விவசாய நிலத்தின் மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மதுபாட்டில்கள் வாங்கும் மதுபிரியர்கள், ஆங்காங்கே விவசாய நிலத்தில் அமர்ந்து குடிக்கிறார்கள். பின்னர் போதை தலைக்கு ஏறியதும், காலி மதுபாட்டில்களை விவசாய நிலத்திலேயே உடைக்கிறார்கள். 
இதனால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் விவசாய நிலத்தில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கால்களை உடைந்த காலி மதுபாட்டில்கள் பதம் பார்க்கிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி வடதாரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. 

முற்றுகை 

இந்த நிலையில் வடதாரம் கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு கருப்புக்கொடியுடன் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அங்கு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோஷமிட்டனர். 
அந்த சமயத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக வந்த விற்பனையாளரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் டாஸ்மாக் கடையை திறக்காமலேயே அங்கிருந்து சென்று விட்டார். இந்த போராட்டம் மாலை வரை நீடித்ததால் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இனியும் டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்தால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறிவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்