மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2021-02-12 16:36 GMT
மதுரை, 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை சித்திரை திருவிழா 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த விழாக்களில் பிரமோற்சவ திருவிழாவாக சித்திரை திருவிழாவை குறிப்பிடுவார்கள். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா உலகப்புகழ் பெற்றது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஆனால் பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் மட்டும் கோவிலுககுள் பக்தர்கள் யாரும் இல்லாமல் நடத்தப்பட்டது. அதே போன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா நடைபெற்றது.
15-ந் தேதி கொடியேற்றம்

இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 15--ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் 22-ந் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 23-ந் தேதி திக்விஜயம், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24-ந் தேதியும், 25-ந் தேதி பெரிய தேர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
அதேபோன்று கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை 26-ந் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் 27-ந் தேதியும் நடைபெறும். எனவே சித்திரை வருடப்பிறப்பு தொடங்கியதில் இருந்து மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் தொடங்க உள்ளது.
மாசி வீதிகளில் சாலை பணி 

திருவிழாவில் முக்கிய நிகழ்வான சாமி வீதி உலா நான்கு மாசி வீதிகளில் காலை, இரவு என இருவேளை நடைபெறும். தற்போது நான்கு மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு காங்கீரிட் சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. திருவிழாவிற்கு முன்னர் இந்த சாலை பணிகள் நிறைவடையுமா என்பது தற்போது கேள்விகுறியாக உள்ளது. தெற்கு மற்றும் மேலமாசி வீதிகளில் மட்டுமே 85 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்குமாசி வீதி, கீழமாசி வீதிகளில் 50 சதவீத பணிகள் கூட நிறைவேறாத நிலை இருக்கிறது. எனவே நான்கு மாசி வீதிகளில் 100 சதவீத பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை.
அவ்வாறு நிறைவடையவிட்டால் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாமி வீதி உலா நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பெரிய தேர் பவனி போன்றவை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே திருவிழா நடைபெறுவதற்கு முன்பு சாலை பணிகளை சீரமைத்து இந்தாண்டு திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு விரைந்து செய்ய வேண்டும். இதன் மூலம் சித்திரை திருவிழா இந்தாண்டு முழுமையாக நடைபெறுவதற்கு அரசு வழி வகை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்