வேலூரில் லாரியில் கடத்திய 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேலூரில் லாரியில் கடத்திய 16 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வேலூர் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் வந்தது. கலெக்டர் உத்தரவின்பேரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்குமார், தினேஷ் மற்றும் குழுவினர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி டிரைவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியில் சோதனைச் செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. அதிகாரிகள், லாரியுடன் 16 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் (வயது 43) என்றும், ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.