கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
பூந்தமல்லி,
சென்னை வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24). இவர், மேற்கூரை அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் குடியிருக்கும் சரவணன் (14), என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் காரை சிறைபிடித்து, அதன் டிரைவரை சரமாரியாக தாக்கி அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த பார்த்திபன் மற்றும் சரவணன் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி போக்குவரத்து போலீசார் கார் டிரைவரான கோடம்பாக்கம், ராம் காலனியை சேர்ந்த ரவி (24) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.