மாமல்லபுரம் கடற்கரையில் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம்
மாமல்லபுரம் கடற்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் பாண்டியராஜன் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார்.
மாமல்லபுரம்,
எடப்பாடி 2021 என்ற கோஷத்தை முன் வைத்தும், அ.தி.மு.க. அரசின் 5 ஆண்டு சாதனைகளை முன்வைத்தும் மீண்டும் 2021 அ.தி.மு.க. ஆட்சி என்ற தலைப்பில் மாமல்லபுரம் கடற்கரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி நீள மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் சிற்ப கல்லூரியில் பட்டம் பெற்ற 10 சிற்பக்கலைஞர்கள் மூலம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராகவன் இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். கடந்த 10 நாட்களாக 10 சிற்ப கலைஞர்கள் மணலை ஒரு இடத்தில் குவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நின்ற கோலத்தில் இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் தனது இரட்டை விரலை காண்பிக்கும் தோரணையில் இந்த மணல் சிற்பம் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், மணல் சிற்ப அமைப்பாளருமான ராகவன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிகுழும உறுப்பினர் கணேசன், அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பி.ஏ.எஸ்வந்தராவ், வி.பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு மணல் சிற்பத்தை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பார்வையிடுவதற்காக திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை நினைவு படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மணல் சிற்பம் கலை, பண்பாட்டு துறையின் கீழ் உள்ள சிற்பக்கல்லூரி பயிற்சி மாணவர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் இந்த மணல் சிற்பம் காட்சிபடுத்தப்பட உள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழக தொல்லியல் துறை சரியாக மேற்கொள்ளவில்லை எனவும், அ.தி.மு.க. ஆட்சியில் அகழாய்வு பணிகள் சரிவர செய்யப்படவில்லை எனவும் ஒரு பொய்யான தகவலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார்.
தற்போது ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி காலத்தில் கீழடி அகழாய்வு நடத்துவது குறித்து எந்த வித பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் ஆட்சி காலத்தில் கீழடி என்றால் அதன் முக்கியத்துவம் மக்களுக்கு என்னவென்று தெரியாமல் இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. தமிழக தொல்லியல் துறையின் பணிக்கும், அகழாய்வு பணிக்கும் இந்த ஒரு மணல் சிற்பம் முன்னுதாரணம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இதுவரை கீழடியில் ரூ.55 லட்சம் மதிப்பில் 6 கட்ட அகழாய்வு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை (நாளை) சனிக்கிழமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 3 நாட்கள் காட்சி படுத்தப்படும் இந்த மணல் சிற்பத்தை சுற்றி மாமல்லபுரம் நகரின் பெருமைகளை உணர்த்தும் வகையில் சிறிய மணல் சிற்பங்கள் அமைக்கவும் சிற்பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தரைப்பகுதியில் இருந்து பொதுமக்கள் இந்த மணல் சிற்பத்தை சரியாக கண்டுகளிக்க முடியாது என்பதால மணல் சிற்பத்திற்கு எதிர் முனையில் சவுக்கு கம்புகளால் 20 அடி உயரத்திற்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் ஏறி மணல் சிற்பத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனபால், வி.எஸ்.ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.