விபசார தடுப்பு பிரிவு போலீஸ் போல் நடித்து காருடன் டிரைவரை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் - 4 பேர் கைது

விபசார தடுப்பு பிரிவு போலீஸ் போல் நடித்து காருடன் டிரைவரை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-12 04:43 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரமேஷ் என்ற நபர் தொடர்புகொண்டு பேசினார். அவர், தான் திருநெல்வேலியில் இருந்து பேசுவதாகவும், தனது காரையும், கார் டிரைவர் ஞானசேகர் (வயது 24) என்பவரையும் சிலர் கடத்திச் சென்றதாக புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சென்னை வியாசர்பாடி அடுத்த சாஸ்திரி நகர் பகுதியில் இருந்த டிரைவர் ஞானசேகர், கார் மற்றும் கடத்தல் காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொரட்டூர் பகுதியில் காரை வரவழைத்து கடத்தி சென்றதால் அவர்கள் கொரட்டூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

கொரட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில், திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆன்லைன் மூலம் விபசாரம் நடத்தி வந்ததாகவும், பெண்களை காரில் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த வகையில் வாடிக்கையாளரை அழைத்துவர ஞானசேகர் காரில் சென்றபோது கடத்தப்பட்டதும் தெரிந்தது.

மேலும் காரில் வந்தவர்கள் நாங்கள் விபசார தடுப்பு பிரிவு போலீசார் என்றும் ரூ.2 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாகவும் ரமேசை மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வியாசர்பாடியை சேர்ந்த பிரபு (32), உதயகுமார் (32) மற்றும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் விஜயபாஸ்கர் (42) கலிசா வாபா (63) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ரமேஷ் மற்றும் ஞானசேகரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்