பணி நிரந்தரம் செய்யக்கோரி காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் நிறுவனம் முற்றுகை - 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பணி நிரந்தரம் செய்யக்கோரி காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் நிறுவனம் முற்றுகையிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் காமராஜர் மீனவ கிராம கடலோரத்தில் 140 குடும்பத்தினரை 13 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்று இடம் அளித்து தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தினர் அங்கிருந்து வெளியேற்றினர்.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கியது. 13 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அவர்களை பணி நிரந்தரம் செய்ய நிர்வாகம் முன்வரவில்லை.
இதுகுறித்து அரசின் பல்வேறு தரப்பினருக்கு புகார் செய்தும் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காட்டுப்பள்ளி கிராம மக்கள் ஒன்று கூடி தனியார் கப்பல் கட்டுமானம் முன்பு அந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கவேண்டும் என்று கூறி நேற்று காலை 6 மணியளவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 1 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.