சேலம் விமான நிலையத்தில் கூடுதலாக 2 விமானங்கள் நிறுத்த இடம் தேர்வு
சேலம் விமான நிலையத்தில் கூடுதலாக 2 விமானங்கள் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் விமான நிலையத்தில் கூடுதலாக 2 விமானங்கள் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விமான போக்குவரத்து
மத்திய அரசின் உதான் திட்டத்தில் சென்னை-சேலம், சேலம்-சென்னை இடையே பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் 50 முதல் 65 பேர் வரை இந்த விமானத்தில் சென்று வருகிறார்கள். தொடர்ந்து சேலம் விமான நிலையத்தில் கூடுதல் விமான போக்குவரத்துக்கு 2 ஆண்டாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஓடுதளம் புதுப்பிக்கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டன.
இரவில் விமானங்களை இறக்க, அதிநவீன கருவிகளுடன் கூடிய விளக்குகள் பொருத்தும் பணி முடிந்துள்ளது. தற்போது விமானம் நிறுத்தும் இடத்தில் மேலும் 2 விமானங்கள் நிறுத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அங்கு இரவில் வெளிச்சம் தரக்கூடிய வகையில் 2 உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தம்
சேலம் விமான நிலையத்தில் விரைவில் மத்திய அரசு சார்பில் விமான பயிற்சி பள்ளி அமைக்க, இந்திய விமான ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கூடுதலாக 2 விமானங்களை நிறுத்த விமான நிலையத்தில் ரூ.5½ கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அங்குள்ள தீயணைப்பு நிலையம் அருகே மேலும் 2 விமானங்களை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயணிகள் விமானம் சென்னையில் இருந்து வந்து செல்வதால், அதற்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கிய பின்னர் இந்திய விமான பாதுகாப்பு இயக்குனரக உத்தரவை தொடர்ந்து பணிகள் தொடங்க உள்ளது.