சங்ககிரி தொகுதியில் சரத்குமார் போட்டி?

கொங்கு மண்டல மக்களையும் கவரும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சங்ககிரி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வேட்புமனு தாக்கலுக்கு தேவையான ஆவணங்களை அக்கட்சியினர் தயார் செய்து வருகிறார்கள்.

Update: 2021-02-11 23:31 GMT
சேலம்:
கொங்கு மண்டல மக்களையும் கவரும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சங்ககிரி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வேட்புமனு தாக்கலுக்கு தேவையான ஆவணங்களை அக்கட்சியினர் தயார் செய்து வருகிறார்கள்.
சமத்துவ மக்கள் கட்சி
சென்னையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமீபத்தில் நடந்த புதிய கொடி அறிமுக விழாவில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும், அதேசமயம் தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட தயாராக இருப்பதாகவும் கூறினார். இது அக்கட்சியின் நிர்வாகிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, சமீபத்தில் சேலத்திற்கு வந்த சரத்குமார், சங்ககிரி தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாகவும், இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொகுதிகளிலும் நாம் போட்டியிட தயாராக வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசி உள்ளார்.
சங்ககிரியில் சரத்குமார் போட்டி?
இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சேலம் மண்டல செயலாளர் மைக்கேலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 
தென் மாவட்டங்களில் மட்டுமே சரத்குமார் போட்டியிடுகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் கொங்கு மண்டலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்தார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் தொகுதியிலும், சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தொகுதியிலும் இந்த முறை சரத்குமார் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஒருவேளை கூட்டணி அமையாவிட்டால் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்க தயாராகி வருகிறார்கள். இதற்காக தொகுதி வாரியாக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம், என்றார்.
இந்த முறை கொங்கு மண்டல மக்களை கவரும் வகையில் சங்ககிரி தொகுதியில் சரத்குமார் போட்டியிட தயாராகி வருவதாக சமத்துவ மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்