சேலத்தில் 3-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்
சேலத்தில் நேற்று 3-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம்:
சேலத்தில் நேற்று 3-வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதம்
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி டாக்டர்கள் போல் 58 விதமான அறுவை சிகிச்சை செய்யலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு சட்ட வரைவு கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் 5 ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் கடந்த 9-ந் தேதி முதல் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நடந்தது. சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத்தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் சேலத்தை சேர்ந்த டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆதரிக்க மாட்டோம்
இதுகுறித்து சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத்தலைவர் பிரகாசம் கூறும் போது, சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று (நேற்று) 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கலப்பட மருத்துவத்தால் அண்டை மாநில மாணவர்கள் இங்கு படிக்கும் போது தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த கலப்பட மருத்துவத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்றார்.