தண்ணீா் தேடி வந்தபோது நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான்
தண்ணீா் தேடி வந்தபோது நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் புள்ளிமான் புகுந்தது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலையில் மான், கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது.
இந்தநிலையில் பாலமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி பி.கே.புதூர் கிராமத்துக்குள் புகுந்தது. மானை கண்டதும் அங்குள்ள நாய்கள் விரட்ட தொடங்கின. இதனால் நாய்களுக்கு பயந்து புள்ளிமான் அந்த கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. வீட்டுக்குள் புள்ளிமான் புகுந்ததை கண்டதும் நாராயணன் ஓடிச்சென்று வீட்டின் கதவை பூட்டினார். மேலும் நாய்களை அங்கிருந்து விரட்டினார். பின்னர் அவர் இதுபற்றி சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புள்ளிமானை மீட்டு சென்னம்பட்டி வனப்பகுதியில் உள்ள ஜவுளி முடக்கு என்ற இடத்தில் பாதுகாப்பாக விட்டனர்.